அலங்காநல்லூர் அருகே கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ-ல் வெளியான தகவலால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள கிழக்கு தெருவில் புதியதாகக் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், புதியதாகக் கால்வாய் அமைக்காமல், கால்வாய் கட்டியதாக ஊராட்சி சார்பில் பணம் எடுக்கப்பட்டதை அறிந்த கோபி என்ற இளைஞர், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார்.
ஆனால், அதிகாரிகள் பதில் அளிக்காததால் ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டுள்ளார். அதில், கழிவுநீர் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டதாகவும், ஒப்பந்ததாரருக்கு அதற்கான நிதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோபி, கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், முறையாக பணிகளை செய்யாத அதிகாரிகள், ஒப்பந்ததரார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
















