புதுச்சேரி சென்றுள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பாஜக தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் இரண்டு நாட்கள் பயணமாக புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். புதுவை மாநிலத்தில் என். ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக சிறிய மாநிலமான புதுச்சேரியில் பாஜக கவனம் செலுத்துகிறது.
ஏற்கனவே நடைபெறும் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதோடு இந்த முறை அதிக அளவில் வேட்பாளர்களை நிறுத்தவும் பாஜக திட்டமிட்டு வருகிறது.
அந்தவகையில், பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினின் புதுச்சேரி வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக செயல் தலைவர் நிதின் நபின் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
முன்னதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா , புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் அப்பா பைத்திய சுவாமி கோயிலில் முதலமைச்சருடன் வழிபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, மாநில வளர்ச்சி குறித்து பாஜக செயல் தலைவரோடு பேச்சுவார்த்தை நடத்தியதகாவும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
















