ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரை வர்த்தக பாதையை மீண்டும் மாற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கு என்ன காரணம்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அண்மையில் ஜோர்டான் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, புவியியலை வாய்ப்பாகவும், அந்த வாய்ப்பை வளர்ச்சியாகவும் எப்படி மாற்றுவது என்பது குறித்து ஜோர்டான் மன்னருடன் விவாதித்ததாகத் தெரிவித்தார். அத்துடன், ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம் வழியாக இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு நீண்ட காலம் வர்த்தகம் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பாதையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்தியா பெட்ரா நகரம் வழியாக ஐரோப்பாவுடன் மீண்டும் வர்த்தகத்தைத் தொடர முடியுமா என்பது குறித்து பலரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர். ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதிதான் பெட்ரா. சவுதி அரேபியா, எகிப்து, சிரியா மற்றும் மத்திய தரைக்கடலை இணைக்கும் முக்கியமான வர்த்தக பாதையில் இந்நகரம் அமைந்துள்ளது. கி.மு 4ம் நூற்றாண்டில் பெட்ரா நகரம், உலகளவில் முக்கியமான வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. பெட்ரா என்றால் பாறை என்று அர்த்தம்.
பெரும்பாலும் பறைகளில் இருந்து செதுக்கப்பட்ட கட்டங்களை கொண்டிருந்ததால், இந்த நகரம் இந்த பெயரை பெற்றது. கிழக்காசிய நாடுகளில் இருந்தும், ஆப்பிரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவிற்கு பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்றால், பெரும்பாலும் பெட்ரா நகர் வழியாகத்தான் சென்றாக வேண்டும். அரேபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வாசனை திரவியங்களும், சீனாவில் இருந்து பட்டு உள்ளிட்ட பொருட்களும் இந்த நகர் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் இருந்து மசாலா பொருட்கள், தேயிலை, பருத்தி ஆடைகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்டவை பெட்ரா நகரை கடந்து ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.
பெரும்பாலும் குஜராத்தில் இருந்து இந்த பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடல் வணிகம் கோலோச்ச தொடங்குவதற்கு முன்பு வரை, பாலை நிலங்கள் வழியாகத்தான் அதிகளவில் வர்த்தக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு விற்பனை பொருட்களை ஒட்டகங்களில் ஏற்றிச் சென்ற வணிகர்கள், பெட்ரா நகரில் ஓய்வெடுத்த பின்னர், தங்கள் பயணத்தை தொடர்ந்துள்ளனர். பெட்ரா நகரை கடந்து செல்லும் வணிகர்கள் அனைவரும் 25 சதவீதம் வரை சுங்க வரி செலுத்த வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்நரகம் செல்வ செழிப்பு மிக்கதாக இருந்துள்ளது.
இந்த நகரின் முக்கியத்துவத்தை உணர்ந்த ரோமானியர்கள், இதனை கைப்பற்றி தங்கள் ஆட்சிக்குகீழ் கொண்டு வந்தனர். பின்னர், இஸ்லாமியர்களின் ஆட்சி காலத்தின்போது, ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான பாதையாகப் பெட்ரா நகர் மாறியது. தற்போது இந்நகரம் வணிக பயணத்திற்கான பாதையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. 1985ல் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பெட்ரா முக்கியமான சுற்றுலா தலமாக மாறியது. இந்நிலையில்தான், அதன் வர்த்தக பாதையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோர்டானின் பெட்ரோ, இந்தியாவின் எல்லோரா இடையேயான இரட்டை நகர ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த 2 பகுதிகளுமே குடைவரை கட்டங்களுக்குப் பெயர் போனவை என்பதால், அவற்றின் தனித்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பெட்ரா நகரை மீண்டும் வர்த்தக பாதையாகப் பயன்படுத்து குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















