வங்கதேசத்தில் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியேறியதாகவும் சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து, ஆட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்காற்றிய ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் வன்முறை வெடித்தது.
இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், வங்கதேசத்திற்கு இசை நிகழ்ச்சிக்காகச் சென்ற மேற்குவங்கத்தை சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தாம் எதிர்கொண்ட பயங்கர அனுபவங்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் தேதி வங்கதேசம் சென்றபோது நிலைமை சாதாரணமாக இருந்தது என்றும், பின்னர் நிலைமை மோசமடைந்ததால் இந்தியன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று உள்ளூர்வாசிகள் அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
மேலும், வங்காள மொழியை பேசியதால் ஒரு வழியாக உயிர் தப்பித்து வந்ததாகவும் இசைக் கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்துள்ளார்.
















