அமெரிக்காவில் மாஸ்கட் வடிவ பொம்மையுடன் பாதுகாவலர் ஒருவர் மைதானத்தில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
டெக்சாஸ் மாகாணத்தில் ஹியூஸ்டன் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பேஸ்பால் போட்டி நடைபெற்றது. இதில், மாஸ்காட் எனப்படும் அந்தந்த அணிகளின் உருவ பொம்மைகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், போட்டியின் இடைவேளையில், ஒரு மாஸ்காட் அங்கிருந்த பாதுகாப்புக் காவலரிடம் சென்று வம்பு செய்யத் தொடங்கியது. முதலில் பொறுமையாக இருந்த அந்தக் காவலர், திடீரெனத் மாஸ்காட்டைப் பின்னுக்குத் தள்ளினார்.
அப்போது, சண்டை நிகழப் போவதாக ரசிகர்கள் நினைத்த நிலையில், அந்தப் பாதுகாப்புக் காவலர் மின்னல் வேகத்தில் பிரேக் டான்ஸ் ஆடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர் ஒரு சாதாரணப் பாதுகாப்புக் காவலர் அல்ல என்றும் அவர் ஒரு தொழில்முறை நடனக் கலைஞர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, மைதான நிர்வாகம் அவரைப் பாதுகாப்புக் காவலர் உடையில் அமர்த்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
















