ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளைகள் தயாராகி வருகின்றன. உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையை தயார்படுத்தும் பணியில் தாயும் மகளும் ஈடுபட்டுள்ளனர். அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
பொங்கல் திருநாளை ஒட்டி உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு களைகட்டுவது வழக்கம். அந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறிப் பாயக் காளைகள் தயாராகி வருகின்றன. அதிலும் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையை தயார்படுத்தும் பணியில் தாயும் மகளும் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை பாலமேடு வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் – மஞ்சுளா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மகள் அழகு பிரியாவும் தாய் மஞ்சுளாவும் ஜல்லிக்கட்டு மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக வீர தீரத்துடன் காளையை வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைக்குத் தங்களது குலதெய்வம் பெயரில் சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் எனப் பெயரிட்டுள்ளனர்.
குழந்தையிடம் நெருக்கமாகப் பேசிப் பழகுவதுபோல் தங்களது ஜல்லிக்கட்டு காளையை பராமரித்து வளர்த்து வருகின்றனர். “எங்கள் குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இல்லை, அனைவருக்குமே பெண் குழந்தைகள் அதனால் இந்த ஜல்லிக்கட்டு காளை எங்களுக்குக் குடும்ப வாரிசு” என உணர்ச்சி பொங்க கூறுகிறார்
அழகுபிரியா. மக்காச்சோளம், புண்ணாக்கு, பிஸ்கட், வாழைப்பழம், வைக்கோல், கடலைச் செடி எனக் காளைக்கு உணவளிக்க ஜல்லிக்கட்டுக்கு சீறிப் பாயத் தயாராகி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் களம் கண்ட சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் காளை வீரர்களிடம் சிக்காமல் எகிறி குதித்து வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.
30 ஜல்லிக்கட்டுகளிலும் அழகு பிரியா தனது தந்தையுடன் நேரடியாக வாடிவாசல் சென்று காளையை களமாட வைத்துள்ளார். இந்தக் காளை மட்டுமின்றி மேலும் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளையும் அழகுபிரியா, அவரது தாய் மஞ்சுளா உள்ளிட்டோர் வளர்த்து வருகின்றனர்.
தற்போது சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் காளை ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் நிலையில், அது மீண்டும் சீறிப் பாய்வதை காண தாய், மகள் மட்டுமின்றி பலரும் காத்திருக்கின்றனர்.
















