பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் 2026 சட்டமன்ற தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர். இதில் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அர்ஜூன் ராம் மேக்வால், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு, பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை தனது நண்பர் எனக் குறிப்பிட்டார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்வது குறித்து ஆலோசித்ததாக தெரிவித்த அவர், 2026ல் மக்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றும் ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம் என்றும் சூளுரைத்தார்.
















