முல்லைப்பெரியாறு அணையில் ரிமோட் நீர்மூழ்கி மூலம் மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அணை பலம் இழந்து விட்டதாக கூறி கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்த நிலையில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையில் மத்திய மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, 2011ம் ஆண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அணை உறுதியாக உள்ளதாக சான்றிதழ் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியாக நீரை தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி, முல்லைப் பெரியாறு அணையில் மண்ணியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தண்ணீரில் மறைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பகுதிகளை ரிமோட் கன்ட்ரோல் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
















