கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ராஷ்டிர பிரேர்னா ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகளும் உள்ளன. இந்நிலையில் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்கள் மற்ற தலைவர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாக விமர்சித்தார். காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்ட தேசிய சின்னங்களை பாஜக கௌரவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பாகுபாடு இல்லாமல் அனைத்து ஏழைகளுக்கும் அரசுத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும் அனைவரின் கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என்றும் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.
















