திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்ணிடம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அந்நாட்டையே வரதட்சணையாக கேட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நினைவுகூரும் வகையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாஜ்பாய் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதன்படி 1999 இல் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு பேருந்தில் சென்றதை குறிப்பிட்டார். பயணத்தின் போது சக தலைவர்களுடன் வாஜ்பாய் பேசியதை கண்டு ஈர்க்கப்பட்ட பாகிஸ்தான் பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாஜ்பாயிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார்.
அதற்கு வரதட்சணையாக காஷ்மீரை தர வேண்டும் என பெண் நிபந்தனை விதித்ததாகவும், சிரித்து கொண்டே பதிலளித்த வாஜ்பாய், திருமணம் செய்து கொள்ள தயார், ஆனால் முழு பாகிஸ்தானையும் வரதட்சனையாக தர சம்மதமா’ என்று கேட்டதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சி தலைவர்களை விமர்சிக்கும் போதும், கண்ணியமான முறையிலேயே வாஜ்பாய் விமர்சித்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
















