லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியனில் நடந்த அனல் பறந்த விவாதத்தில், பாகிஸ்தானின் வாதத்தை முறியடித்து, இந்தியாவின் ஆற்றலை, விருப்பத்தைப் பறைசாற்றிய இந்திய சட்ட மாணவரின் குரல் உலகம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது. யார் அந்த மாணவர்…. விவாதத்தில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியனில் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கொள்கை, பாதுகாப்பிற்கானது அல்ல; அது ஒரு மக்கள் விருப்ப அரசியல் உத்தி” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சரின் மகனுமான மூசா ஹராஜ் ஒருங்கிணைத்து நடத்தினார்.
இதில் பங்கேற்க இந்திய தரப்பில் வழக்கறிஞர் ஜே.சாய் தீபக் மற்றும் எம்.பி., பிரியங்கா சதுர்வேதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அனுப்பப்பட்ட அழைப்பிதழால் விவாதத்தில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. இதனை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மூசா ஹராஜ், விவாதத்திலிருந்து இந்தியா பின்வாங்கி விட்டதாகப் பிம்பத்தை உருவாக்க முயன்றதோடு, பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கவும் முனைப்பு காட்டினார்.
அதனைத் தவிடுபொடியாக்கும் வகையில் விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய சட்ட மாணவர் வீரான்ஷ் பானுசாலி, சூழ்ச்சியின் மூலம் வெற்றி பெற நினைத்த மூசா ஹராஜின் முகத்திரையை கிழித்தெறிந்தார்… மும்பையைச் சேர்ந்த வீரான்ஷ் பானுசாலி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வரும் நிலையில், விவாதத்தில் பங்கேற்று, பாகிஸ்தானின் வாதங்களை முறியடிக்கும் வகையில் சிங்கமாகக் கர்ஜித்தார்.
பாகிஸ்தான் தன்னை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எனச் சித்தரிக்க முயன்ற நிலையில், அதனை உடைத்தெறிந்தார் வீரான்ஸ் பானுசாலி… லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதலால் மூன்று இரவுகளாக மும்பை உறங்கவில்லை, நானும் உறங்கவில்லை என்றார்… மும்பை பற்றி எரியும்போது, தொலைக்காட்சியின் முன் அமர்ந்து தன் தாயின் குரலில் இருந்த நடுக்கத்தையும், தந்தையின் முகத்தில் இருந்த இறுக்கத்தையும் பார்த்தவன் நான் என்று கூறினார்.
பாகிஸ்தான் தரப்பு வாதங்களை வேரறுக்க, தனக்கு அலங்கார வார்த்தைகள் தேவையில்லை, ஒரு காலண்டர் போதும் என்றார் பானுசாலி… 1993 மும்பை குண்டுவெடிப்பு நடந்தபோது இந்தியாவில் தேர்தல் நடக்கவில்லை என்று கூறி விவாதத்திற்கு உரிய தலைப்புக்கே முடிவுரை எழுதினார். அது ஓட்டுக்காகச் செய்யப்பட்டதல்ல, மாறாக இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை உடைக்க திட்டமிட்டு பாகிஸ்தான் நடத்திய போர் என்று முழங்கினார். 1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் உள்ள பிளாசா திரையரங்கில் RDX வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 257 பேர் உயிரிழந்தனர்.
அப்போது இந்தியாவில் தேர்தல் நடந்ததா என்று கேள்வி எழுப்பிய பானுசாலி, தாவூத் இப்ராஹிமும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யும் இந்தியாவின் நிதி முதுகெலும்பை உடைக்க திட்டமிட்ட போர் நடவடிக்கை என்று உரக்கக் கூறினார். 26/11 தாக்குதலுக்குப் பின் அப்போதைய காங்கிரஸ் அரசு ராஜ தந்திர ரீதியிலான நடவடிக்கையின் மூலம் பொறுமை காத்ததாகக் கூறிய அவர், அது அமைதியை தரவில்லை, மாறாக, பதான்கோட், உரி, புல்வாமா தாக்குதல்களையே தந்தாக எடுத்துரைத்தார்.
தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் குற்றவாளிகளைத் தண்டித்தோம், நிறுத்தினோம் என்றும், நாங்கள் படையெடுக்கவில்லை, நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்… தன் நாட்டு மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியாத பாகிஸ்தான் அரசு, வறுமையை மறைக்க போர் என்ற பிம்பத்துடன் வேடிக்கை காட்டுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.
2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது, வீரான்ஷிற்கு இரண்டு வயது, பெற்றோருடன் மும்பை ட்ரைடென்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகச் சுட்டதில் நூலிழையில் உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர்.
இந்தியா போரை விரும்பவில்லை, வெங்காயத்தையும் மின்சாரத்தையும் வர்த்தகம் செய்யும் ஒரு சாதாரண அண்டை நாடாகவே இருக்க விரும்புவதாகவும், ஆனால் பயங்கரவாதம் நின்றால் மட்டுமே அது சாத்தியம் என்ற அவரது வரிகள் உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலிக்கின்றன.
















