இந்தியாவில் இருந்து தப்பியோடிய லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் லண்டனில் ஒன்றாகப் பார்ட்டி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவர்களை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீபத்தில் 70வது பிறந்த நாளைக் கொண்டாடிய விஜய் மல்லையாவுக்கு, லலித் மோடி லண்டனில் ஒரு பிரம்மாண்டமான பார்ட்டி அளித்தார். இந்த விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் லலித் மோடி கேமராவைப் பார்த்து சிரித்துக் கொண்டே, தாங்கள் இந்தியாவின் மிகப்பெரிய தப்பியோடிய குற்றவாளிகள் என்று ஏளனமாகப் பேசுகிறார். இந்திய இணையதளத்தில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்புவோம் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோரை நாடு கடத்த உறுதிபூண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
















