கோவை மாவட்டம் அன்னூர் அருகே குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி உள்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இம்ரான் – பர்வினா தம்பதியின் 5 வயது ஆண் குழந்தைதான் கடத்தப்பட்டிருந்தது.
குழந்தையை காணாமல் பெற்றோர் பரிதவித்த நிலையில், இம்ரான் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், குழந்தையை கடத்திவிட்டதாகவும், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ச்சியும், பயமும் அடைந்த இம்ரான் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துப்பு துலக்கியதில், குழந்தையை கடத்தியவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டதோடு, வடமாநில தொழிலாளர்கள் இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுலைமான் அலி, அப்துல்ஹக் என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
















