மணல் அள்ளப்பட்ட அளவைக் கணக்கிட நடத்தப்பட்ட ஆய்வு சட்டவிரோதமானது என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மணல் குவாரிகளில் ட்ரோன்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதாகவும், அதில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுப்பதற்குப் பதிலாக, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தமிழக அரசு உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முறையான அனுமதி இன்றி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வருவதால் இதில் விசாரணை நடத்த தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மணல் குவாரிகளில் இருந்து எடுக்கப்பட்ட அளவை விடக் குறைவான அளவே கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகளை நிரூபிக்கவே அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் நிபுணர்களின் உதவியைப் பெற அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், மணல் கொள்ளை தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கக் கூடும் என்பதால் நிபுணர் உதவியை நாடியதாகவும் அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.
















