பட்டா வழங்கக் கோரி, ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். பட்டா வழங்குவதில் ஏன் தாமதம். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஆடு, மாடுகள், மூட்டை முடிச்சுகளுடன் ஆண்டி வேடம் தரித்த இவர்கள், பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த ஏமனூர் கிராம மக்கள். பட்டா கேட்டுச் செவி சாய்க்காத அரசை கண்டித்துதான் இந்தப் போராட்டமே! 1925ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, அணை பகுதியில் வசித்த மக்களை மேட்டு நிலங்களுக்கு மாற்றியது அப்போதைய ஆங்கிலேயே அரசு.
5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மேட்டூர் அணைக்காகத் தாரை வார்த்த மக்கள், அரசு வழங்கிய இடத்தில் குடிபெயர்ந்தனர். அதில், தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாகமரை ஊராட்சியில் ஏமனூர், சிங்காபுரம், ஆத்து மேட்டூர், தோழன்காடு, மேற்கு ஏமனூர் உள்ளிட்ட 7 கிராமங்களும் அடக்கம்.
இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தையும், மீன்பிடி தொழிலையும் நம்பி பிழைப்பு நடத்தி வரும் மக்கள், 91 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர். இதில் ஏமனூர் கிராமத்தில் வசிக்கும் இடத்திற்கு பலமுறை பட்டா கேட்டும் அரசு வழங்க மறுப்பதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள்.
1997ம் ஆண்டு 450 வீடுகளுக்கு வழங்கிய பட்டாவை போலியானது எனக் கூறும் அதிகாரிகள், ஏமனூர் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பட்டா வழங்க இயலாது என்று கைவிரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தெருவிளக்கு, குடிநீர், இலவச வீடு, மின்சாரம் என எதற்கும் வனத்துறை அனுமதி வழங்காததால், அரசு நலத்திட்டங்கள் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தவர்கள், பட்டா வாங்கித் தர அனைத்து ஏற்பாடும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள் என்றும், தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.
தங்கள் கிராமத்திற்கான அரசுத் திட்டங்களை பெற ஒவ்வொருமுறையும் போராட வேண்டியிருப்பதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். அரசு தங்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஏமனூர் கிராம மக்களின் விருப்பம்.
















