பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பாரிமுனையில் பேரணி செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனத்திடம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சென்னை பாரிமுனையில் இருந்து தலைமைச் செயலகம் வரை பேரணி செல்லவிருப்பதாகத் தூய்மைப் பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதனைத் தடுப்பதற்காக அப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில், என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஆங்காங்கே திடீரெனச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, சீருடை அணியாத போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளர்களிடம் அராஜக போக்குடன் நடந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை சாலைகளில் தரதரவென இழுத்தும், குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்தனர்.
















