அண்மையில் வெளியான துரந்தர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தின் வெற்றி பாகிஸ்தான் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பிற நாடுகளின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானை பாதுகாக்க, அந்நாட்டின் ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீர் பல்வேறு ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, சீனாவிடம் இருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், துருக்கியிடம் இருந்து ஏவுகணைகள் என அவர் வாங்கி வரும் ஆயுதங்களின் பட்டியல் நீள்கிறது. ஆனால், பாகிஸ்தான் மீது துரந்தர் திரைப்படம் நிகழ்த்தி வரும் தாக்குதலை எதிர்கொள்ள அசீம் முனீரிடம் எந்தக் கவசமும் இல்லை.
உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மையமாக கொண்டு, 2019ம் ஆண்டு “உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்ற திரைப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் எடுத்திருந்தார். அவரது இயக்கத்தில் தற்போது துரந்தர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. 1999ம் ஆண்டு நடைபெற்ற ஐசி-814 விமான கடத்தல், 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து தாக்குதலிலும் பாகிஸ்தான் வகித்த பங்கு என்ன என்பதையும், பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் அரசுக்குள்ள தொடர்பு எத்தகையது என்பதையும் துரந்தர் திரைப்படம் தோலுரித்து காட்டியுள்ளது. இது, பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிர்பார்த்தது போலவே இந்தத் திரைப்படம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கோடிக்கணக்கான பாகிஸ்தான் மக்கள், சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து படத்தை பார்த்து வருகின்றனர்.
இதனால், அண்மை காலத்தில் பைரசி முறையில் அதிகளவில் பார்க்கப்பட்ட படமாகத் துரந்தர் உருவெடுத்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல் ஒருவர் குறித்த பகுதிகள் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ராணுவ ஜெனரல் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது முதலே எகிற தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் அனைத்து ராணுவ ஜெனரல்களுமே பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். குறிப்பாக, ஜிஹாதி ஜெனரல் என அழைக்கப்படும் ஜாவேத் நாசிர், ஐஎஸ்ஐ இயக்குநராக இருந்த ஹமீத் குல், ஆஷ்பக் பெர்வேஸ் கயானி, நதீம் தாஜ் என அனைவருமே இந்தியாவுக்கு எதிரான மறைமுகப்போரை நடத்தியுள்ளனர்.
எனவே, இவர்களில் ஒருவரை சித்தரிக்கும் வகையில் 2ம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய திரைப்படங்களால் அசீம் முனீர் மட்டுமன்றி, பல ராணுவ தளபதிகள் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, பர்வேஸ் முஷரஃப். 2007ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி இண்டியா டுடே கான்க்ளேவ் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பேசிய முஷரஃப், பாகிஸ்தானை மோசமாகச் சித்தரிக்கும் இந்திய திரைப்படங்கள் குறித்த தனது அதிருப்தியை பதிவு செய்தார். மேலும், பாகிஸ்தான் எதிர்ப்பு படங்களில் நடிக்க வேண்டாம் என ஐஸ்வர்யா ராய்க்கு அவர் கோரிக்கையும் விடுத்தார். இது அந்தச் சமயத்தில் முக்கிய பேசுபொருளானது. ஆனால், தொடக்க காலத்தில் இந்தியாவில் எடுக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான திரைப்படங்கள் அத்தனை வலுவாக இல்லை என்பதை சினிமா விமர்சகர்கள் சுட்டி காட்டுகின்றனர்.
1992ம் ஆண்டு வெளியான ரோஜா, 2000ம் ஆண்டு வெளியான மிஷன் காஷ்மீர் போன்ற படங்கள் பயங்கரவாதிகள் மீது அனுதாபம் காட்டும் வகையில் இருந்ததாகச் சில விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல, காஷ்மீர் பண்டிட்கள் விரட்டியடிக்கப்பட்டது குறித்தும், பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் அரசுக்கு இருந்த தொடர்பு குறித்தும் தொடக்க கால படங்களில் பேசப்பட்டதில்லை. டிசம்பர் 16 போன்ற சில படங்கள் மட்டும் இதில் விதிவிலக்காக அமைந்தன.
ஆனால், துரந்தர் திரைப்படம் அந்தக் குறையைப் போக்கியுள்ளது. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்புகுறித்து அந்தப் படம் ரத்தமும் சதையுமாகக் காட்சியப்படுத்தியுள்ளது. எனவே, துரந்தர் படத்தை இந்திய சினிமாவின் ஒரு மைல்கல் என விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
















