திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியதால் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அதிகாலை 4.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இரண்டு கோபுரங்கள் வழியாகப் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
















