சபரிமலையில் மண்டல பூஜையின் போது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை, கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. கோயில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இவ்விழாவின் சிகர நிகழ்வான மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, மண்டல காலம் நிறைவுபெற்று, கோயில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்படும். இந்நிலையில், மண்டல பூஜையின் போது தேவஸ்தானம் ஈட்டிய வருவாய் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய தலைவர் கே. ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு சபரிமலை தேவஸ்தானம் 332 கோடியே 77 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஈட்டிய 297 கோடியே ஆறு லட்சத்தைவிட சுமார் 35 கோடி ரூபாய் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















