உத்தரபிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன் அதிகமாக உள்ளதாக தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியின் பதிவிற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழக கடன் நிலைமை மோசமாகியுள்ளதாகவும், கடன் தொகை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை வரவேற்று அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பொய் சொல்வதில் கோபாலபுரம் குடும்பம் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாக விமர்சித்துள்ளார்.
இண்டி கூட்டணியில் உள்ள ஒருவர் தரவுகளைப் புரிந்துகொண்டு கடன் குறித்து பகிரங்கமாகப் பேசுவது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 5 ஆண்டுகளில், தமிழகத்தின் கடனை திமுக அரசு இரட்டிப்பாக்கி உள்ளதாகவும், அதே நேரத்தில் பற்றாக்குறைகளை மறைப்பதற்கும், வளர்ச்சிக் கதைகளை முன்னிறுத்துவதற்கும் கடன்களை வசதியாகப் பயன்படுத்துகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
திமுகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே உண்மையில் என்ன நடக்கிறது? என்றும்,ஐக்கிய முற்போக்கு கூட்டணி சகாப்தத்தின் மோதல் மீண்டும் உருவாவது போல் தெரிகிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
















