டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விஐபி மண்டலங்களில் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் சுதந்திர தின விழாவின்போது சுதர்சன சக்கரம் என்ற பெயரில் உள்நாட்டிலேயே ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விஐபி மண்டலங்களில், வான் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 5 ஆயிரத்து 181 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு டெல்லியை சுற்றி 30 கிலோ மீட்டர் சுற்றளவில் நவீன வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பல அடுக்கு பாதுகாப்பை வழங்கும் என்றும், ட்ரோன்கள், ஏவுகணைகளின் நிகழ் நேர இருப்பிடத்தை அறிந்து இடைமறித்து அழிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தற்சார்பு கொள்கையில் சுதர்சன சக்கரம் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















