இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாகப் பார்க்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா – நாக்டா இடையேயான ரயில் தடத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை சர்வ சாதாரணமாக எட்டி, இந்த ரயில் அசத்தியுள்ளது.
சோதனையின் போது, ஜன்னல் ஓரத்தில் நான்கு கண்ணாடி டம்ளர்களில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.
மூன்று டம்ளர்களை கீழே அடுக்கி, அதன் மேல் ஒரு டம்ளரை வைத்து ரயில் எந்த அளவுக்குக் குலுங்குகிறது என்று சோதனை செய்யப்பட்டது.
வியக்கத் தக்க வகையில், அத்தனை வேகத்திலும் டம்ளர்கள் நகரவோ, தண்ணீர் சிந்தவோ இல்லை. இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் உயர்தர தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்குக் கிடைக்கும் அதிர்வற்ற சொகுசான பயணத்தை உலகிற்கு பறைசாற்றியுள்ளார்.
















