ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக கோயிலில் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து அம்மனும், சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் Kநீண்ட வரிசையில் காத்திருந்து மனமுருகி வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, வண்ண மலர்கள் அலங்காரத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் காட்சியளித்த நிலையில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் ராஜகணபதி கோயில் முன்பு திரளான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். சேலம் ராஜகணபதி கோயில் இரவு நடை சாத்தப்பட்டாலும், ராஜகணபதி வெளியே தெரியும்படி கிரீல்கேட்டு பொருத்தப்பட்டிருக்கும்.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவு முன்பு திரளான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதேபோன்று, சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலிலும் வியாபாரிகள். பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
















