புதிய அரசாணை ரத்து செய்ய கோரி புத்தாண்டு தினத்திலும் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 மற்றும் புதிய அரசாணைகளை எதிர்த்து சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு இதுவரை உரிய முடிவு எடுக்காததால், புத்தாண்டையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என நலச்சங்கம் அறிவித்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார், புதிய அரசாணைகள் அலுவலர்களின் நலனுக்கான பிரச்னை அல்ல என்றும், சிறுகுறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தோட்டக்கலைத் துறை மிகவும் தனித்துவமான தொழில்நுட்பங்களைக் கொண்டது என்றும், பிற துறைகளின் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு சரியாக எடுத்துச் சொல்ல முடியாது எனவும் கூறினார்.
மேலும், அனைத்து துறைகளின் கருத்துகளும் பெறப்படாமல், ஒரு துறைக்கு சாதகமாக மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என சிவக்குமார் குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராணி, புதிய திட்டங்களால் தோட்டக்கலைத் துறையின் அடையாளமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வல்லுநர் குழு அமைக்காமல் திடீரென அரசாணை வெளியிட்டு 196 அலுவலர்கள் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அரசு செவிசாய்க்காததால் புத்தாண்டையும் பொருட்படுத்தாமல் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செந்தில்ராணி தெரிவித்தார்.
















