இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நாளை அந்தமானில் இருந்து தனி விமானம் மூலம் நேரடியாகத் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்குச் செல்லும் அவர், அங்கு நடைபெறவுள்ள பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
நாளை இரவு பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக திருச்சி திரும்பும் அமித் ஷா, அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை மறுநாள் காலை வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார்.
தரிசனத்தை முடித்த கையோடு, காலை 11 மணியளவில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 2026 தேர்தலுக்கான வியூகங்கள் மற்றும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் நடைபெறவுள்ள ஒரு கலாச்சார விழாவிலும் அமித் ஷா பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
















