பாகிஸ்தான் ஆதரவுடன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் பிடியில் வங்கதேசம் முழுமையாக விழுவதற்கு முன், அந்நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலர, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் அமைதியாகவும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கதேசம் ஒரு அண்டை நாடு மட்டுமல்ல. கிழக்கு பகுதிகளின் அமைதிக்கு ஒரு தூணாகவும், நிலம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அரணாகவும், வங்காள விரிகுடா புவிசார் அரசியலில் ஒரு முக்கிய நட்பு நாடாகவும், பயங்கரவாத நெட்வொர்க்-களுக்கு எதிரான ஒரு முக்கிய கவசமாகவும் உள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வங்கதேசத்தில் ஜனநாயகம் கேள்விக் குரியதாக மாறியுள்ளது.
இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்ற முகமது யூனுஸ், அடிப்படைவாத இஸ்லாமிய சக்திகளுடன் சேர்ந்துகொண்டு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு கதவுகளைத் திறந்துவிட்டார். வங்கதேசத்தை ஒரு “வங்காள பாகிஸ்தான்” ஆக மாற்றும் முயற்சிகளில் யூனுஸ் ஈடுபட்டுவருகிறார்.
ஜூலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் ‘தேசிய குடிமக்கள் கட்சி’ (NCP) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். இக்கட்சி அந்நாட்டில் மாற்று அரசியல் பற்றிப் பேசுவதாக, இந்தியாவைப் பகிரங்கமாக விமர்சித்து வருகிறது.
கடந்த 11 மாதங்களில், இந்தியாவுக்கு எதிராகப் பேசும் ஒரு கட்சியாக NCP தன்னை அடையாளப் படுத்தியுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தின் சுதந்திரத்தையே எதிர்த்த ஜமாத்-இ-இஸ்லாமி என்று அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப் போவதாக NCP அறிவித்துள்ளது.
இன்னொரு பெரிய கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, ‘ஜமியத் உலமா-இ-இஸ்லாம்’ உள்ளிட்ட மற்ற இஸ்லாமிய அமைப்புகளுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி வந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், வங்கதேச தேர்தல் அங்குள்ள இஸ்லாமிய சக்திகளுக்கு இடையேதான் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே வங்கதேச தேசியவாத கட்சியின் செயல்தலைவர் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் நாடு திரும்பிய சில நாட்களில் அவரது தாயாரும் அந்நாட்டின் முதல் பெண் பிரதமருமான கலீதா ஜியா 80வது வயதில் மரணமடைந்தார்.
கலீதா ஜியாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வங்கதேசம் சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் பிரத்யேக இரங்கல் கடிதத்தை கலீதா ஜியாவின் மகனும் BNP யின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மானிடம் ஒப்படைத்ததோடு பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். இது இதுவரை இல்லாத நடைமுறை என்று கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கிருந்த இரங்கல் புத்தகத்தில், இந்தியாவின் இரங்கல் செய்தியை எழுதியுள்ளார்.
மோடியின் இரங்கல் கடிதம், கலீதா ஜியாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் ஒரு சாதாரண நடவடிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், தேர்தலுக்குப் பிறகு பிரதமராக அதிக வாய்ப்புள்ள தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்பதற்கான அடையாளம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டாக்காவுக்குச் சென்று, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும்,இந்திய இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, வங்கதேசத்தில் தீவிரமடையும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்கள் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் வங்கதேச ராணுவத் தலைவர் வக்கர்-உஸ்-ஜமானிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இவையெல்லாம் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து விலகி இருப்பதும் மற்றும் மதச்சார்பற்ற, விடுதலைப் போரிலிருந்து உருவான அடையாளத்தைப் பாதுகாப்பதும் என ஒரு பொறுப்பான அரசு வங்கதேசத்தில் இருப்பதையே இந்தியா எதிர்பார்க்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
தேசிய துக்கத்தில் பங்கெடுப்பதும், தாரிக் ரஹ்மானுக்கு இரங்கல் கடிதம் கொடுப்பதும் என புதிய இராஜதந்திரத்தின் மூலம் தனக்கான அரசியல் மட்டுமில்லாமல் வங்கதேச அரசியலையும் ஜனநாயக பாதைக்குத் திருப்புகிறது இந்தியா.
இதன் மூலம் வங்கதேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக அடையாளத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதை அழுத்தமாக இந்தியா பதிவு செய்துள்ளது.
















