இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போது எங்கே என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…
இந்தியா முழுவதும் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்புக்கு விடையளித்துள்ளது ரயில்வே அமைச்சகம்… நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இயங்கத் தொடங்கும் என்று கூறியுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் காண உள்ளது என்று தெரிவித்துள்ளார்…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையையும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தையும் இணைக்கும் வகையில் 508 கிலோ மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி மும்பை – அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் தடம் படிப்படியாக திறக்கப்படும என்று அறிவிக்கப்பட்டுள்ளது..அகமதாபாத், வதோதரா, பருச், சூரத், வாபி, தானே மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை படிப்படியாக இணைக்க உள்ளது..
சூரத்திலிருந்து பிலிமோரா வரை முதற்கட்டமாகவும், வாபியிலிருந்து சூரத் வரை 2வது கட்டமாகவும், வாபி முதல் அகமதாபாத் வரை – மூன்றாவது கட்டமாகவும் புல்லட் ரயில் பாதை திறக்கப்படும் என்றும், தானே முதல் அகமதாபாத் வரையிலும் மும்பை முதல் அகமதாபாத் வரை இறுதியிலும் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், குஜராத் -தாத்ரா-நகர் ஹவேலிக்கு இடையே 352 கிலோ மீட்டர் தூரத்தையும், மகாராஷ்டிராவில் 152 கிலோ மீட்டர் தூரத்தையும் உள்ளடக்கியது.
இந்த வழித்தடத்தில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமான அதாவது 465 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையானது, உயர்த்தப்பட்ட பாலங்களில் கட்டப்பட்டு வருகிறது. 326 கிலோ மீட்டர் உயரமான கட்டமைப்புகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், 25 ஆற்றுப்பாலங்களில் 17 பாலப் பணிகள் முடிந்துள்ளன. 47 கிலோ மீட்டர் நீளமுள்ள சூரத்- பிலிமோரா பிரிவு மிகவும் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு கட்டுமான பணிகளும், தண்டவாள படுக்கை தயாரிப்பு பணிகளும் முழுமை பெற்றுள்ளன.
உலகப் புகழ்பெற்ற வைரத் தொழிலால் ஈர்க்கப்பட்ட ஒரு கட்டமைப்பாக பார்க்கப்படும் சூரத் ரயில் நிலையம் 26.3 மீட்டர் உயரத்தில் 58 ஆயிரத்து 352 பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
தரைதளம், பார்க்கிங் என மூன்று தளங்களாக கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், தற்போது முழுமை பெறும் நிலையில் உள்ளன. 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று தனது சேவையைத் தொடங்கும் புல்லட் ரயில், உலகத் தரம் வாய்ந்த நகரங்களுக்கு இடையேயான பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















