அரசு ஊழியர்களுக்கு ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட’த்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்றும், ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என்றும், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
















