தாமிரபரணி நதியை மீட்க ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் ஆகியவை தடையாக உள்ளதாக நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீர்பாதுகாப்பு நிபுணரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராஜேந்திர சிங்கை நியமனம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, நெல்லைக்கு வந்த ராஜேந்திர சிங், ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். இதனை அடுத்து, சிந்துபூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கங்கையுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஒரு சிறிய எளிய நதி என்றும், நல்ல மழையுள்ள பகுதியில் உள்ள தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம் எனவும் தெரிவித்தார்.
தாமிரபரணி நதியை மீட்பதற்கு நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், தாமிரபரணி நதி குறித்த தனது முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் 30 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
















