சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெண் காவலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஐந்து மாதங்களாக போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் நந்தினி (28). நேற்று பெண் காவலர் நந்தினி மயிலாப்பூர் ஆர் கே சாலை ஜம்புலிங்கம் தெரு சிக்னல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் எதிர்திசையில் (one way) மது போதையில் வந்துள்ளனர்.
அப்போது பெண் காவலர் நான்கு பேரை மடக்கிப்பிடித்து ஏன் நான்கு பேர் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ஒருவர் தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பெண் காவலரின் கையை பிடித்து இழுத்து பின்புறமாக முறுக்கி பிரச்சனை செய்துள்ளார்.
அதன் பின்னர் பெண் காவலர் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் நான்கு பேரில் இருவரை பிடிக்கவே உடனிருந்த கூட்டாளிகளான இருவர் இருசக்கர வாகனத்தின் மூலம் தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் பிடிபட்ட பெருமாள் மற்றும் பிரேம் குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்திய போது தப்பி ஓடியவர்கள் ஜீவா மற்றும் சீனிவாசன் என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் பெருமாள் மற்றும் பிரேம்குமார் கொடுத்த தகவலின் பெயரில் மயிலாப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து ஜீவா மற்றும் சீனிவாசன் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஜீவாவின் தம்பி ஆகாஷ் உடைய இருசக்கர வாகனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தியது, திருவல்லிக்கேணி முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (28), மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28), ராயப்பேட்டையை சேர்ந்த ஜீவா (23) மற்றும் கருப்பன் என்கிற சீனிவாசன் (27) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பெருமாள், பிரேம்குமார் மற்றும் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணையை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
















