புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பெண் காவலரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரியின் காரைக்கால் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு காவல் நிலையத்தில் எஸ்பியாக பணியாற்றிய சுப்பிரமணி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
புதுச்சேரிக்கு பணிமாறுதல் ஆன பிறகு பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக, காவல் தம்பதியினர் இடையே சண்டை வந்ததால், மனமுடைந்த பெண் காவலர் பினாயிலை குடித்து தற்கொலை முயன்றார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் வீடு திரும்பிய நிலையில், மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் பெண் காவலரின் தாய் புகார் மனு அளித்தார்.
இதனை அடுத்து, பெண் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன், பெண் கண்காணிப்பாளர் ரட்சனா சிங் மற்றும் சமூக அமைப்பை சேர்ந்த பெண் கொண்ட உட்புகார் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள டிஜிபி உத்தரவிட்டார்.
அதன்படி, பெண் காவலரிடம் விசாரணை குழுவினர் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது முக்கிய ஆதாரங்களை பெண் காவலர் சமர்ப்பித்துள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
















