மதுரை மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் செய்வதிலும், காளைகளை அலங்கரிப்பதிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. ஒருபுறம் விழா கமிட்டியினர் மேற்பார்வையில் வாடி வாசலை தயார்செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் காளை உரிமையாளர்கள் காளைகளை போட்டிக்கு தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிப்பதிலும் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், மேலூர் பகுதியில் சங்கு பாசி, மூக்கு கயிறு, கழுத்து நூல் கயிறு, பிடி கயிறு, நெத்திப்பாறை, வடகயிறு உள்ளிட்டவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது..
கழுத்து சலங்கை, கால் சலங்கை, வெங்கல மணி, திருகாணி, குங்குமம் போன்றவற்றையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்…
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது குழந்தைகளுக்கு எப்படி புத்தாடைகள் அணிவித்து மகிழ்வோமோ, அதேபோல்தான், காளைகளையும் அலங்கரித்து மகிழ்வதாக காளை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ள நிலையில், போட்டியை காண பொதுமக்களும் ஆர்வமாய் காத்துக்கிடக்கின்றனர்….
















