பெரிய பொருளாதார நாடான இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான மைல்கல் என நியூசிலாந்து பிரதமர் லக்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன?
இந்தியா – நியூசிலாந்து இடையே 9 மாத வர்த்தக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடந்த டிசம்பரில் இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தன. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் நியூசிலாந்தில் வரி வசூலிக்கப்படாது… நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 70 சதவிகித பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்கிறது. இதன் காரணமாக அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நியூசிலாந்து ஆர்வம் காட்டி வருகிறது…
இந்த சூழலில் உலகின் மிகப்பெரிய நாடு மற்றும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது உண்மையில் மிகப்பெரிய மைல்கல் என்றும், இந்தியா உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் சிறந்த ஒப்பந்தம் என்றும் குறிப்பிடுகிறார் நியூசிலாந்து பிரதமர் லக்சன்.
இருதரப்பு உறவில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அவர், இந்தியாவில் முதலீடு செய்வதில் நியூசிலாந்து மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கூறினார். வலுவான மற்றும் நம்பகமான கூட்டாண்மையை உருவாக்குவதில் அரசின் கவனத்தை இது பிரதிபலிக்கிறது என்பது அவரது கூற்றாக உள்ளது. இந்தியா உடனான ஒப்பந்தம், ஆழமான மற்றும் நீடித்த நன்மைகளை வழங்கக்கூடியது என்பதும் அவரது கருத்து.
விக்சித் பாரத் 2047 என்ற தேசிய தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தனித்து நிற்கிறது. 2025ம் ஆண்டு மார்ச் 16-ல் இதற்கான அச்சாரம் போடப்பட்டது… வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முறையாகத் தொடங்கின… 5 சுற்று பேச்சுவார்த்தை, பலமுறை நடந்த சந்திப்புகள், தொடர்ச்சியான, தீவிரமான விவாதங்களை கடந்து இந்த ஒப்பந்தமானது இறுதி செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது, வேலைவாய்ப்பை உருவாக்கும், வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும், விவசாய உற்பத்தித்திறனுக்கான புதுமைகளை வளர்க்கும் அதுமட்டுமின்றி, நீண்டகால பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்த MSME பங்கேற்பை மேம்படுத்தும்.
நியூசிலாந்துக்கு இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவிகிதம் வரியற்ற ஏற்றுமதிக்கு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வழிகாட்டுவதால், ஜவுளி, ஆடை, தோல், காலணிகள், கடல் பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், கைவினைப் பொருட்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் உழைப்பு மிகுந்த துறைகள் போட்டித் தன்மையுடன் மேம்படுத்த உதவுகிறது. இந்தியா – நியூசிலாந்து இடையேயான வர்த்தகம் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு இந்தியாவின் பதிலடியாகவே இந்த தடையற்ற வர்த்தகத்தை பார்க்கலாம்..
















