மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் வரத்து குறைவால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக உசிலம்பட்டி சந்தைக்கு பூக்களின் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது.
இதனால் கடந்த வாரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ, தற்போது 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ முல்லைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 650 ரூபாய்க்கும், கனகாம்பரம் 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பொங்கல் பண்டிகையும் நெருங்குவதால் விலை ஏற்றம் கண்டிருப்பது வியாபாரிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொங்கல் பண்டிகை மற்றும் வரத்து குறைவு காரணமாக மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப் பூ 8 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், முல்லைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வியாபாரிகள், பொங்கல் பண்டிகை முடியும் வரை மல்லிகை விலை குறைய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
















