திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி சந்தனக்கூடு விழா கொடியேற்றியதற்காக, தர்கா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லத்தி மரம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் தல விருட்சமாகும். மருத்துவ பலன்கள் வாய்ந்த இந்த மரம் இந்து பாரம்பரியத்தில் புனிதமான மரமாக கருதப்படுகிறது. இதற்கிடையே அங்குள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவின்போது, மலை மீதிருந்த கல்லத்தி மரத்தில் கொடியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, இது தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அப்போது மலை மீது கல்லத்தி மரம் உள்ள இடம் கோயில் சொத்தா? தர்கா சொத்தா? என கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், இது குறித்து தர்கா நிர்வாகம் மீது கோயில் நிர்வாகம் புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக உள்துறை கண்காணிப்பாளரின் அனுமதியின்றி சந்தனக்கூடு கொடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும், கல்லத்தி மரத்தில் ஏற்றப்பட்ட கொடியை உடனே இறக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் திருப்பரம்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
















