மென்பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜோஹோ (Zoho) நிறுவன பொறியாளர் ஒருவர் தனி ஆளாக, வெறும் ஒரு மாதத்தில் உருவாக்கியுள்ள மேம்பட்ட AI கருவி தொழில்நுட்பம் உலகையே உற்று நோக்க வைத்துள்ளது.
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது நிறுவன பொறியாளர் ஒருவரின் அசாத்திய திறமையைக் கண்டு வியந்து போனதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எங்கள் நிறுவன பொறியாளர் ஒருவர் தான் உருவாக்கிய புதிய தொழில்நுட்பக் கருவியைக் கடந்த மாதம் தம்மிடம் காட்டினார் எனவும் அந்தக் கருவியின் ஆழத்தையும், அதன் பரந்து விரிந்த பயன்பாட்டுத் திறனையும் கண்டபோது தாம் உண்மையிலேயே வியந்து போனேன் என்றும் கூறியுள்ளார்.
ஒரு வருடம் கடினமாக உழைத்து உருவாக்க வேண்டிய ஒரு தொழில்நுட்பத்தை, அந்தப் பொறியாளர் ஒரு மாத காலத்திற்குள் முடித்துள்ளார் என்றும், இதற்கு ‘Opus 4.5 AI’ என்ற மாடல் மிக முக்கியக் காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜோஹோவில் மென்பொருள் பொறியாளர்களை தன்னிச்சையாகச் சோதனைகள் செய்ய அனுமதிக்கிறோம் என்றும், அந்தச் சுதந்திரமே புதிய பாதைகளைக் கண்டறிய உதவுகிறது என்றும், இப்படித்தான் நாங்கள் கற்றுக்கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
















