சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடை பாதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி வழியாக செல்வதை ஏற்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது… சீனா – பாகிஸ்தான் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் கூறியுள்ளது… இதற்கான காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்…
லடாக்கின் வடக்கே, சியாச்சின் பனிப்பாறைக்கு அப்பால் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியின் பெயர்தான் Shaksgam Valley அதாவது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு… 1963ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..
அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியானது சீனாவுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை… மாறாக, ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று வலியுறுத்தியது..
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில், இந்தியா – சீனாவுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதியாகவும் பார்க்கப்படுகிறது…
சீனா அண்மையில் இப்பகுதியில் சாலைகள் அமைத்து வரும் நிலையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு வழியாகச் செல்வதை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது…
இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
1963ம் ஆணடு கையெழுத்தான சீனா -பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் தெரிவித்தார். அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது, செல்லாதது என்றும் இந்தியா தொடர்ந்து கூறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்..
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும் என்றும், இது பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளுக்குப் பலமுறை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் தரை யதார்த்தத்தை மாற்றும் முயற்சிகளுக்கு எதிராகச் சீனத் தரப்பிற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையைத் தேசம் விட்டுக்கொடுக்காது என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியப் படைகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த சியாச்சினுக்கு வடக்கே அமைந்துள்ள ஷக்ஸ்காம் பகுதியில் சீனா நீளமான அனைத்து வானிலைக்கும் ஏற்ற வகையிலான சாலையைத் தீவிரமாக அமைத்து வருகிறது…
கிட்டத்தட்ட 10 மீட்டர் அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்தச் சாலை 75 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும், கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின. நிலைமை இப்படியிருக்கும் நிலையில், இந்தியா அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது.
















