சவுதி அரேபியாவிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான்… இந்த சூழலில் கடனை அடைப்பதற்கு பதிலாக போர் விமான ஒப்பந்தங்களை வழங்க சவுதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது….
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது உலகம் அறிந்த விஷயம்… பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் வழங்கும் வெளிநாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் நிற்கிறது சவுதி அரேபியா… இதே போன்று உலக வங்கி, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல அரபு நாடுகளிடம் இருந்தும் பாகிஸ்தான் கடன் பெற்று வருகிறது… எனினும் பாகிஸ்தானால் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றே கூறப்படுகிறது…
வேளாண் உற்பத்தி, தொழில் வளர்ச்சியில் மந்தமான சூழல், அரசு நிர்வாகத்தில் காணப்படும் அளவற்ற ஊழல், பயங்கரவாத தாக்குதல், உள்நாட்டு கிளர்ச்சியென எங்குப் பார்த்தாலும் கண்ணிவெடி வைத்தாற்போல், அந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கான சாத்தியம் மங்கிப் போயுள்ளது…. கடனுக்காக அங்கும், இங்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, ஆண்டுக்கு 4 சதவிகித குறைவான வட்டியில் அவ்வப்போது கடன் வழங்கிக் காப்பாற்றி வருகிறது சவுதி அரேபியா. வாங்கினால் கொடுத்துத்தானே ஆக வேண்டும்…
கடன் சுமை 12 பில்லயன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் தற்போது நிலவும் சூழலால் அதற்குச் சாத்தியமே இல்லை என்ற நிலை உள்ளது. இதைப் புரிந்து கொண்ட சவுதி அரேபியா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்துக் கொண்டே செல்கிறது.
இந்தச் சூழலில் சவுதி அரேபியாவுக்கு செலுத்த வேண்டிய 2 பில்லியன் டாலர் கடனுக்கு ஈடாக JF-17 போர் விமான ஒப்பந்தங்களை வழங்கப் பாகிஸ்தான் முன்வந்துள்ளது… இதற்காகப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இருநாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
‘இஸ்லாமிக் நேட்டோ’ என்று அழைக்கப்படும் அந்த உடன்பாட்டின்படி, சவூதி அரேபியா மீது வேறு எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும், அது பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும். அதேபோல், பாகிஸ்தான் மீது இந்தியா உள்பட எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும் அது சவூதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பாா்க்கப்படும்.
இந்தச் சூழலில் ராணுவ ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் முயற்சியாகவே இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி சீனாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட JF-17 தண்டர் ரக போர் விமானங்களை, சவுதி அரேபியாவுக்கு வழங்கும் வகையில் 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த ஒப்பந்தம் இறுதிவடிவம் பெற்றால், சவுதி அரேபியாவிடம் வாங்கிய 2 பில்லியன் டாலர் கடனைப் பாகிஸ்தான் ஈடுகட்டும், மீதமுள்ள தொகை ஆயுதங்கள், மின்னணு உதிரி பாகங்கள் வாங்கவும், விமானிகளுக்குப் பயிற்சி வழங்கவும் பெற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குப் பின்னர், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது இருநாடுகளின் பாதுகாப்பு உறவைக் கணிசமாக ஆழப்படுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து மேம்பட்ட F-35 போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டிவந்த நிலையில், அதனை இஸ்ரேல் எதிர்த்தது,. மேற்கத்திய விமானங்களுடன் ஒப்பிடும்போது JF-17 விமானத்தின் குறைந்த விலை மற்றும் எளிமையான பராமரிப்பு காரணமாகச் சமீபத்திய ஆண்டுகளில் அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளதாகவே கருதப்படுகிறது.
மேலும் JF-17 விற்பனைக்கான சாத்தியக்கூறுகள் வங்கதேசத்துடன் பாகிஸ்தான் விவாதித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது.
















