கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனைக்கு மத்தியில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அத்துமீறி நுழைந்து ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. சோதனையின்போது மம்தா பானர்ஜி வரம்பு மீறினாரா,
கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவனத்திலும், அதன் இயக்குநரும், திரிணாமுல் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரருமான பிரதிக் ஜெயின் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனையும்தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அமலாக்கத்துறை சோதனைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி செயல்பட்ட விதம் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
அமலாக்கத்துறை சோதனையும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அத்துமீறலும் சட்டம் மற்றும் அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளன. இருதரப்பும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளன. இந்த விவகாரத்தைச் சற்று பின்னோக்கி பார்த்தால், அதற்கான காரணம் புரியும்.மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டன.
“கிங்பின்” அனுப் மஜீ தொடர்பாக நடத்தப்பட்ட இந்தச் சோதனைகள், மிகப்பெரிய அளவிலான நிதி மோசடிகளை வெளிப்படுத்தின. இந்த முறைகேடுகளில் மேற்குவங்கத்தின் மிகப்பெரிய எஃகு நிறுவனமான ஷகாம்பரி குழுமத்திற்கும், அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக் நிறுவனத்திற்குமாகத் தொடர்பைக் கண்டறிந்தது அமலாக்கத்துறை… 2020 ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையுடன் தொடங்கிய விசாரணையில், அனுப் மஜீ சம்பந்தப்பட்ட ஒரு கும்பல், ECL-இல் உள்ள குத்தகைப் பகுதிகளிலிருந்து நிலக்கரியை கடத்தி புருலியா, பங்குரா மற்றும் பர்தமனில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளுக்கு விநியோகித்தது.
கடத்தப்பட்ட நிலக்கரியை ஷகாம்பரி குழுமம், வாங்கி குவித்ததையும், அதன் மூலம் கிடைத்த ஹவாலா பணம், ஐ-பேக் நிறுவனத்திற்கு எளிதாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் அமலாக்கத்துறை விசாரணையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக ஐ-பேக் நிறுவனத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்த அமலாக்கத்துறை, தலைமறைவாக உள்ள திரிணாமுல் இளைஞர் தலைவர் வினய் மிஸ்ரா, அவரது சகோதரர் விகாஸ் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள்மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடந்ததையும் கண்டறிந்தது…
அதன்தொடர்ச்சியாகக் கொல்கத்தாவில் ஐ-பேக் நிறுவனம் மற்றும் பிரதிக் ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையீடு வழக்கை விரைவுபடுத்தியிருக்கிறது… பொதுவாக அமலாக்கத்துறை சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் பணமோசடி தடுப்பு சட்டம் பிரிவு 17 அதிகாரமளிக்கிறது.
இந்த விதியின் கீழ், சட்டவிரோத பணப்பரிமாற்றம் அல்லது சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்ய அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு… மேலும் விசாரணை தொடர்பான ஆவணங்கள், பதிவுகள், சொத்துகள் போன்றவற்றை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறை சட்டப்பிரவு அனுமதி அளிக்கிறது…
சட்டப்பூர்வமான சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, தேடுதல் அதிகாரியின் அனுமதி அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாவிட்டால், ஆவணங்கள் அல்லது சாதனங்களை அகற்றுவதற்கு அரசியலமைப்பு அதிகாரி உட்பட எந்தவொரு தனிநபருக்கும் உரிமை இல்லை என்று சட்டம் கூறுகிறது.
இந்தச் சூழலில், அமலாக்கத்துறை சோதனையின்போது, மம்தா மற்றும் அவரது உதவியாளர்கள் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆவணங்கள், ஏற்கனவே கைப்பற்றப்பட்டதா அல்லது பட்டியலிடப்பட்டதா என்பதுதான் பிரச்னையின் மையக்கருவாகப் பார்க்கப்படுகிறது…
பிரிவு 17-ன் கீழ் அமலாக்கத்துறை தனது பறிமுதல் அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தியதா என்பதையும், ஆவணங்களை மம்தா பானர்ஜி கைப்பற்றியதாகக் கூறப்படுவது காவல் சங்கிலியைச் சீர்குலைத்ததா என்பதையும் உயர்நிதிமன்றம் ஆராயலாம். சட்டப்பூர்வமான சோதனையின்போது ஆதாரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தால், அது அமலாக்கத் துறையின் தடை வழக்கை வலுப்படுத்தக்கூடும்.
இருப்பினும், அந்தப் பொருட்கள் விசாரணையின் எல்லைக்கு வெளியே இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டால், மம்தாவின் தரப்பு வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். நீதிமன்றத்தில் குற்றவியல் தன்மை நிரூபிக்கப்பட்டால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரிவு 17, பிரிவு 63 மற்றும் பிரிவு 70 ஆகியவை நடைமுறைக்கு வரக்கூடிய முக்கிய சட்ட விதிகளில் அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ், பொது ஊழியரை பொதுப் பணிகளைச் செய்வதைத் தடுத்தல், பொது ஊழியரைத் தடுக்க தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல் மற்றும் ஆவணங்களை ஆதாரமாக வெளியிடுவதைத் தடுக்க அவற்றை அழித்தல் போன்ற பிரிவுகளையும் உள்ளடக்கிய விதிகளையும் வரையலாம்.
அமலாக்கத்துறையின் I-PAC தேடல் நடவடிக்கையின் போது மம்தா பானர்ஜி சிவப்பு கோட்டை தாண்டினாரா? சட்டம் என்ன சொல்கிறது? அமலாக்கத்துறை சோதனைகளின் போது மம்தா பானர்ஜியின் தலையீடு அரசியல் எதிர்ப்பா அல்லது சட்டரீதியான தடையா? விதிகள் என்ன கூறுகின்றன என்பது நீதிமன்ற விசாரணையில் தெரிய வரும்….
















