இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் – வங்கதேச நாடுகள் நெருக்கம் காட்டி வரும் சூழலில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர், கராச்சி – டாக்கா இடையே விமானச் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கு இந்தியா அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தற்போது பார்க்கலாம்…
வங்கதேசத்தில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட முகமது யூனுஸ், ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்…
இந்தியா உடனான நல்லுறவுகளை புறந்தள்ளிய அவர், பாகிஸ்தான் உடன் அதீத நெருக்கம் காட்டினார்…. இந்தியாவுக்கு எதிராகப் போராட்டங்களைத் திருப்பிவிட்ட அவர் தலைமையிலான அரசு, இந்துக்கள் மீதான தாக்குதல்களையும் ஊக்குவித்ததற்கு அண்மைக்கால வன்முறைகளே சான்றாக நிற்கிறது…
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு, ராணுவ ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது… அண்மையில் இஸ்லாமாபாத் சென்ற வங்கதேச விமானப்படை தளபதில் ஹசன் முகமது கான், பாகிஸ்தான ராணுவ தலைமை தளபதி அசிம் முனீரை சந்தித்து ராணுவ ஒத்துழைப்பை உறுதிபடுத்தினார்…
குறிப்பாக அவரது ஆர்வம் சீனா -பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான JF-17 போர் விமானங்கள்மீது இருந்தது… அதன் தொடர்ச்சியாக அமன்-25 கடல்சார் பயிற்சியில் வங்கதேசமும் – பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டன…
1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இருநாடுகளுக்கு இடையே நேரடி கடல் வர்த்தகம் மீண்டும் தொடங்கியது. மோங்லா துறைமுகத்தில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு அதிக சலுகைகளை வழங்கியது வங்கதேசம். பாகிஸ்தானியர்களுக்கு விசா தளர்வுகளும் வழங்கப்பட்டன… நிலைமை இப்படியிருக்க வங்கதேசத்தின் பிமான் பங்காளதேஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் கராச்சி – டாக்கா இடையே ஜனவரி 29ம் தேதி முதல் விமானச்சேவையை தொடங்குவதாக அண்மையில் அறிவித்திருக்கிறது. அதன்படி ஆரம்பத்தில், பிமான் பங்களாதேஷ் வாரத்தில் இரண்டு நாட்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானங்களை இயக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வாரம், கராச்சி-டாக்கா வழித்தடத்தில் நேரடி விமானங்களை இயக்கப் பாகிஸ்தானின் தனியார் விமான நிறுவனமான ஃப்ளை ஜின்னாவுக்கு வங்காளதேசம் ஒப்புதல் அளித்ததாக வங்காளதேச நாளிதழ் தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சேவை எந்தப் பாதையில் செல்லும் என்பதை செய்தித்தாள் தெரிவிக்கவில்லை.
இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் தங்களது வான்வெளியை பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. அதே நேரத்தில் இந்தியா- வங்கதேச உறவும் குறிப்பிடும்படியாக இல்லை. இந்தச் சூழலில் கராச்சி- டாக்கா இடையே விமானங்கள் பறக்க இந்திய வான்வெளி வழியாக அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை பிமான் பங்களாதேஷ் விமான நிறுவனத்திற்கான பயண உரிமையை இந்தியா அனுமதிக்காவிட்டால், டாக்கா- கராச்சி விமானம் இந்திய தீபகற்பத்தை சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படும்… இது 2300 கிலோ மீட்டர், அதாவது மூன்று மணி நேரப் பயணத்தை, 5800 கிலோ மீட்டருக்கும் அதிகமாகக் கிட்டத்தட்ட எட்டு மணிநேரமாக மாற்றிவிடும்…
பயணிகளைப் பொறுத்தவரை, டாக்கா-கராச்சி இடையே 2,300 கிலோ மீட்டர் நேரடி விமானச் சேவைக்கு 340-420 அமெரிக்க டாலர்கள் செலவாகும், அதே நேரத்தில் 5,800 கிலோமீட்டர் மாற்றுப்பாதை தேர்ந்தெடுக்கப்பட்டால், எரிபொருள் செலவுகள் காரணமாகக் கட்டணங்கள் 640-720 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேல் உயரக்கூடும்.
இது தொடர்பாகக் கேள்விக்குப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின்படி டாக்கா – கராச்சி இடையேயான சேவை கையாளப்படும் என்று கூறியுள்ளது.
இதற்குக் காரணம் தொழில்நுட்ப ரீதியாகவும் சட்ட ரீதியாகவும், இந்தியா அதற்கான திறவுகோலை வைத்துள்ளதுதான்… 1978 ஆம் ஆண்டு இரு அரசாங்கங்களும் கையெழுத்திட்ட இருதரப்பு ஒப்பந்தம், இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான விமான சேவைகளை நிர்வகிக்கிறது..
விமானப் பயண உரிமைகள், நியமிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் அத்தகைய அனுமதிகளை இடைநிறுத்தக்கூடிய நிபந்தனைகள் ஆகியவற்றையும் தாங்கி நிற்கிறது.
இந்த ஒப்பந்தம் வங்கதேச விமான நிறுவனங்களுக்கு இந்திய வான்வெளியில் பறக்கும் உரிமையை வழங்கும்.. அதே வேளையில், ஆலோசனைகளுக்குப் பிறகு அத்தகைய உரிமைகளை இடைநிறுத்தவும் இந்தியாவுக்கு இடமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















