நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான கடிதங்கள், ஆவணங்கள் என முக்கிய தகவல்கள் எம்.பி.க்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே விரைவில் கிடைக்குமென மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று பேசிய அவர், காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு 16 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் நடைபெறுவதாகவும், இந்த உச்சி மாநாட்டை பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மைய மண்டபத்தில் பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடப்பதாகவும் அவர் கூறினார்.
இதனால், கடிதங்கள், ஆவணங்கள் என முக்கியமான தகவல்கள் விரைவில் எம்.பி.,க்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கிடைக்கும் என்றும், இதன் மூலம் எம்.பி.,க்கள் பயனடைவது மட்டுமின்றி பொதுமக்களும் பயனடைவார்கள் எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
















