இந்த ஆண்டில் முதன்முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய PSLV-C62 தனது இலக்கை எட்ட முடியாமல் சுற்றுப்பாதையில் விட்டு விலகி சென்றுள்ளது. திட்டமிட்ட இலக்கைத் தவற விட்டது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவின் சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 16 செயற்கைக் கோள்களை இஸ்ரோ PSLV-C62 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.
இந்த செயற்கைக் கோள்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO வடிவமைத்துள்ள இஓஎஸ் -என் 1 என்னும் அதிநவீன செயற்கைக்கோளும் ஒன்றாகும். இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 505 கிலோமீட்டர் தூரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில்நிலை நிறுத்தப் பட திட்டமிடப்பட்டிருந்தது.
PSLV-C62 ஏவுதளத்திலிருந்து சீறிப் பாய்ந்தது, திட்டமிட்டபடியே அதன் பூஸ்டர்களைக் கழற்றிவிட்டது. ஆனால், மூன்றாவது நிலைக்கு வந்த போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உற்சாகம் மங்கத் தொடங்கியது.
எதிர்பாராத விதமாக உருளத் தொடங்கிய PSLV-C62 ராக்கெட் பாதை மாறியதை டெலிமெட்ரி திரைகள் காட்டின. சமநிலையை இழந்த PSLV-C62 பம்பரம் போல அதன் அச்சிலேயே சுழன்றது.
எடுத்துச் சென்ற செயற்கைக் கோள்களைத் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்குப் பதிலாக, ராக்கெட் தனது பாதையிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியது.
இரண்டு திட எரிப்பொருள் மற்றும் இரண்டு திரவ எரிப் பொருள் என நான்கு நிலைகளைக் கொண்ட PSLV-C62 ராக்கெட், மூன்றாவது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுற்றுப் பாதையைத் தவற விட்டுள்ளது.
இந்தியாவின் முதல் விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் நிலையமான ஆயுள்சாட் செயற்கை கோள் மற்றும் பாதுகாப்புக்கு SUPER EYE என்று கூறப்படும் முக்கியமான அதிநவீன கண்காணிப்பு செயற்கை கோளும் PSLV-C62 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
ஆரம்பத்திலிருந்து மூன்றாவது நிலையின் இறுதிவரை ராக்கெட்டின் செயல்பாடுகள் எதிர்பார்த்தப் படியே இருந்ததாக தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் நாராயணன் மூன்றாவது நிலை முடிவடையும் நேரத்தில் ராக்கெட்டில் அதிகப் படியான அதிர்வுகளைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தரவுகளைக் கவனமாக பகுப்பாய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த மே மாதத்தில் செலுத்திய PSLV-C61 திட்டமும் இதே போல் இயந்திரக் கோளாறால் வெற்றி பெறவில்லை.
போதுமான அழுத்தம் இல்லாமல் சுற்றுப்பாதை வேகத்தை அடைவதற்குத் தேவையான உந்துவிசையை இன்ஜினால் வழங்க முடியவில்லை என்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
இப்போது, இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட 16 செயற்கைக்கோள்கள் விண்ணில் தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது. என்றாவது ஒருநாள், மீண்டும் பூமியின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து, விண்கற்களைப் போல எரிந்து சாம்பலாகும் என்று அஞ்சப் படுகிறது.
இது குறித்து, பின்னடைவுகள் எப்போதும் விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதிதான் என்றாலும் எவ்வளவு விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் மீண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம் என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் சூரிய மின்தகடு நிபுணருமான மனிஷ் புரோகித் குறிப்பிட்டுள்ளார்.
















