மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கூட்ட அரங்கில் பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் ஆகியோர், தங்களுடைய உயர்மட்ட குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றிய ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இன்று நாம் உருவாக்கியுள்ள உயர் கல்வி குறித்த விரிவான செயல் திட்டம், கல்வித் துறையில் நமது கூட்டாண்மைக்கு ஒரு புதிய திசையை வழங்கும் என்றும் ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களைத் திறக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
உக்ரைன் மற்றும் காசா நிலைமை உட்பட உலகளாவிய மற்றும் பிராந்தியப் பிரச்னைகள் குறித்து தாங்கள் இருவரும் விவாதித்ததாகவும், பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆண்டுதோறும் வலுப்பெற்று வருவதாகவும், அதன் தாக்கம் இன்று களத்தில் தெளிவாகத் தெரிவதாகவும் கூறினார்.
















