உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்க்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களையும் இணைக்க வேண்டும், குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
7வது நாளாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 800 ஊராட்சி செயலாளர்கள் மீது வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஊராட்சி செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
















