வங்கதேசம் பிப்ரவரியில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்கள் தேர்தலில் கால்பதிக்க துடிப்புடன் பணியாற்றி வருகின்றன… முன்னாள் ஹசீனாவின் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் சூழல் எப்படியிருக்கும் என்பதை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்…
2024ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெகுண்டெழுந்த மாணவர் போராட்டம், அதன் தொடர்ச்சியாக வெடித்த கலவரத்தால் ஆட்சி அதிகாரத்தை இழந்தது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி… பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைய, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது… இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட முகமது யூனுஷ், பொறுப்பேற்ற கையோடு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்தார்…. அதே நேரத்தில் பல ஆண்டுகால தடைகள், அடக்குமுறைகளை எதிர்கொண்ட, குறிப்பாக வங்கதேச சுதந்திரத்தையே விரும்பாத ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி மீதான தடையை நீக்கினார். சூட்டோடு சூடாக பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தும் அதிர்ச்சியூட்டினார்….
மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது 15 ஆண்டுகால ஆட்சியின்போது இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்… அவரது பதவிக்காலத்தில், போர்க்குற்றங்களுக்காக பல உயர் இஸ்லாமியத் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது… பலர் தூக்கிலிடப்பட்டனர்…
ஷேக் ஹசீனா இல்லாத நிலையில், 1971ம் ஆண்டு வங்கதேச போரின்போது பாகிஸ்தானை ஆதரித்ததாக குற்றம்சாட்ட ஜமாத்-இ-இஸ்லாமி தற்போது பலம் பெற்று வருகிறது… ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் செல்வாக்கு மிக்க கூட்டணியான ஹெஃபாசாத்-இ-இஸ்லாம், வங்கதேசத்தில் ஒரு சக்திவாய்ந்த அடிமட்ட அழுத்தக் குழுவாக செயல்படுகிறது. ஹெஃபாசாத் தலைவர்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்தனர், மேலும் ஆப்கானிஸ்தான் தாலிபான் அதிகாரிகள் டிசம்பரில் வங்கதேசத்திற்கு விஜயம் செய்தனர். வங்கதேசத்தின் இஸ்லாமிய இயக்கங்களின் பிற பிரிவுகள், அரேபிய தீபகற்பத்தில் சக்திவாய்ந்ததாகவும், பல நூற்றாண்டுகள் பழமையான வங்காள கலாச்சார சடங்குகளை நிராகரிக்கும் கடுமையான வஹாபி மற்றும் சலாபி இஸ்லாம் பள்ளிகளைப் பின்பற்றுகின்றன.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஓரங்கப்பட்ட நிலையில், தற்போது அத்தகைய இஸ்லாமிய குழுக்கள், தேர்தலில் காலூன்ற தீவிர பிரசாரத்தை கையில் எடுத்துள்ளன.. நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியாக பார்க்கப்படும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்பட பல்வேறு இஸ்லாமிய குழுக்கள், தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை சாதகமாக்கி அரசாங்கத்தில் கால்பதிக்க துடிக்கின்றன.. இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் சிந்தாந்த ரீதியாக இணைந்திருக்கும் அக்கட்சி, பல்வேறு இஸ்லாமிய குழுக்கள் உடனான இடைவெளியை குறைத்து, இணக்கம் காட்டி வருகிறது…
2024ம் ஆண்டு புரட்சியை ஏற்படுத்திய மாணவர் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியுடன் ஜமாத், கூட்டணி வைத்துள்ளது. அதுமட்டுமின்றி பெண் வேட்பாளர்களை தவிர்த்து ஆண் வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது… 17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில், சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மை பலத்தை கொணடுள்ள நிலையில், நீண்டகாலமாக துன்புறுத்தப்பட்ட அஹ்மதியா சமூகங்களும், ஷியா முஸ்லிம்களும் உள்ளனர். சுமார் 10 சதவீதம் பேரில் பெரும்பாலோர் இந்துக்கள், குறைந்த எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர். இந்த சூழலில் ஜமாத்-இ-இஸ்லாமி இந்து வேட்பாளர் ஒருவரை அறிவித்திருப்பதால், ஆய்வாளர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், சீர்திருத்தம் உள்ளிருந்து வரவில்லை என்றும் அரசியல் ஆய்வாளர் விமர்சித்து வருகின்றனர்…
எனினும் வரவிருக்கும் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்கும், அதன் செயல்பாடு இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா என்பதே தற்போது எழுந்திருக்கும் கேள்வி….
















