அமெரிக்காவின் 500 சதவிகித வரிவிதிப்பு அச்சுறுத்தலால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ள ஏற்றுமதியாளர்கள், வரிவிதிப்பால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய பல்வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்துடன், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 50 சதவிகிதம் வரியால் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மட்டும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய தயாரிப்புகள் மீது 500 சதவிகிதம் வரை வரிவிதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்திருப்பது ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி என்பது முற்றிலும் ரத்தாகும் அபாயம் ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் ஆண்டுதோறும் திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கு மட்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பின்னலாடை ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே 50 சதவிகித வரி விதிப்பிலேயே பெரும் இழப்பை சந்தித்து வரும் நிலையில் தற்போது 500 சதவிகிதம் வரி விதிப்பு அமலுக்கு வந்தால் ஏற்றுமதி முடங்குவதோது பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழலும் உருவாகும் என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இத்தகைய முடிவால் ஏற்படும் இழப்பை சரிகட்ட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஜவுளித்துறைக்கென தனி சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதோடு பின்னலாடை உற்பத்தியாளர்களின் கடனை தள்ளுபடி செய்வதோடு, வரியில்லா வர்த்தக ஒப்பந்தந்த்தை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















