ஈரானில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தைகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஈரான் திகழ்ந்து வருகிறது. வணிக ரீதியாக சாத்தியமான கச்சா எண்ணெய் இருப்பில், சவூதி அரேபியா, ரஷ்யா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் ஈரான் உள்ளது. அத்துடன் உலகின் 2-வது பெரிய இயற்கை எரிவாயு வளத்தையும் ஈரான் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், உலக அரசியல் சமநிலையையும், எரிசக்தி சந்தைகளையும் பாதிக்கக்கூடிய ஒரு தீவிர மாற்றத்தின் விளிம்பில் ஈரான் நின்று வருகிறது. கடந்த சில நாட்களாக அந்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக டெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் அரசின் கடும் மிரட்டல்களையும், அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடக்கத்தில் நாணய மதிப்பிழப்பு, பொருளாதார சரிவு, ஊழல் மற்றும் அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக தொடங்கிய இந்த மக்கள் எழுச்சி, தற்போது நேரடியாக ஆட்சியை அகற்றும் பிரதான கோரிக்கையை முன்னிறுத்தியுள்ளது.
இதற்கிடையே ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராடுபவர்கள் கொல்லப்படுவதாக தெரியவந்தால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள தயங்காது எனவும் எச்சரித்துள்ளார்.
அதற்கேற்ப சாத்தியமான தாக்குதல் திட்டங்கள் குறித்து அதிபர் டிரம்பிற்கு அமெரிக்க பாதுகாப்பு படைகள் விளக்கமளித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த நிலைமை சர்வதேச அரசியல் தலைவர்களையும், உலகின் பெரு முதலீட்டாளர்களையும் தீவிர கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த அரசியல் பதற்றம் உலக எண்ணெய் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி கச்சா எண்ணெய் விலையை 5 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியுள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் தகவல்படி ஈரானில், கடந்த இரு வாரங்களில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு வெளிநாட்டு விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் இணைய மற்றும் தொலைதொடர்பு சேவைகளும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் கடும் அடக்குமுறைகள், அமெரிக்காவின் எச்சரிக்கைகள் மற்றும் உயர்ந்து வரும் உயிரிழப்புகள் ஈரானின் நெருக்கடி நிலையை தீவிரமடைய செய்துள்ள நிலையில், அங்கு தற்போதை ஆட்சி வீழ்ச்சியடைந்தால் அது ரஷ்ய அதிபர் புதினுக்கு முக்கிய அரசியல் பின்னடைவாக அமையும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வெனிசுலா மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இரு முக்கிய கூட்டாளிகளை இழந்த ரஷ்யாவுக்கு, இந்த சூழல் மேலும் ஒரு முக்கிய கூட்டாளியை இழக்கும் நிலையை உருவாக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், சக்திவாய்ந்த ஏவுகணை அமைப்புகளையும், பாதுகாப்பு படைகளின் ஆதரவையும் கொண்டுள்ள ஈரானில், ஆட்சி மாற்றம் எளிதாகவும், அமைதியாகவும் நடக்க வாய்ப்பில்லை எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க ஈரானில் நிலவும் குழப்பம், பிராந்திய நிலைத்தன்மையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாக அரபு வளைகுடா நாடுகளும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக ஈரானில் உள்நாட்டு வன்முறை மற்றும் நாட்டை பிளவுபடுத்தும் செயல்பாடுகள் உருவாகும் அபாயமும் அதிகரித்துள்ளது.
















