உலகின் இஸ்லாமிய நாடுகளின் பாதுகாவலராக பாகிஸ்தானை கொண்டு சேர்க்கும் வேலையில் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தீவிரமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக இஸ்லாமிய நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகில் அணு சக்தி கொண்ட ஒரே இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவிடம் மட்டுமில்லாமல் ஆப்கான் தலிபான்களிடமும் தோற்று சரணடைந்த பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை தளபதியாக அசிம் முனீர் உள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் தோல்வியை மறைக்க அரசை வற்புறுத்தி, தனக்குத் தானே ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
பிறகு, 27வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், நாட்டின் உச்சப் பட்ச அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டார்.
இவருக்காகவே ‘முப்படைகளின் தலைமைத் தளபதி’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, நாட்டின் உயரிய ராணுவ அதிகாரம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தனது ஆயுதக் கையிருப்பில் 81 சதவீதத்தை சீனாவிடமிருந்தும், 5.5 சதவீத ஆயுதங்கள் நெதர்லாந்திலிருந்தும், 3.8 சதவீத ஆயுதங்கள் துருக்கியிடமிருந்தும் பெற்று வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்குப் பாதுகாப்பு மற்றும் இராணுவ வியூகங்களை வழங்குவது என்ற புதுப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அசிம் முனீரின் இந்த அணுகுமுறையை “பாதுகாப்பு ராஜதந்திரம்” என்ற புதிய கோட்பாடாக பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சவூதி அரேபியா, கத்தார்,துருக்கி,லிபியா மற்றும் வங்கதேசம் என பல நாடுகளுடன் இராணுவ கூட்டாண்மை, ஆயுத கொள்முதல் மற்றும் பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை பாகிஸ்தான் வழங்க முன் வந்துள்ளது.
ஏமன், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், மற்றும் லிபியா, சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் போர்ச் சூழலும் நிச்சயமற்ற தன்மையும், சவூதி அரேபியாவை பாகிஸ்தான் பக்கம் தள்ளியதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே சவூதி அரேபியாவிடம் இருந்து பாகிஸ்தான் அதிகக் கடன்களைப் பெற்றுள்ளது. அவற்றில் பல கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடு முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.
கடனையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாத பாகிஸ்தான்,தனக்கு வழங்கப்பட்ட கடனுக்கு ஈடாக 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான JF-17 போர் விமானங்களை சவூதி அரேபியாவுக்கு வழங்க பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறது.
முன்னதாக இருநாடுகளுக்கும் இடையே Strategic Mutual Defence Agreement என்ற பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் அணு ஆயுதம் குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றாலும், அணுசக்தி பகிர்வு மற்றும் செறிவூட்டப் பட்ட யுரேனிய பரிமாற்றம் மறைமுகமாக நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா ஆயுதத் தடை விதித்துள்ள வட ஆப்பிரிக்க நாடான லிபியாவுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இராணுவ தளவாடங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.
இதில் 16, JF-17 போர் விமானங்களையும், 12 அடிப்படை விமானி பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் Super Mushak பயிற்சி விமானங்களையும், லிபியாவுக்குப் பாகிஸ்தான் விற்கிறது.
கடந்த டிசம்பர் மாதம், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்து பேசியதை தொடர்ந்து, வங்கதேச ராணுவத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த JF-17 Block III என்ற போர் விமானங்களைப் பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் வாங்கவும் முடிவு செய்துள்ளது. போர் விமானங்களுடன், ஆரம்பக்கட்ட பயிற்சியளிக்கும் ‘சூப்பர் முஷாக்’ ரக விமானங்களையும் வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் வழங்க உள்ளது.
ராணுவ விமானங்களை விற்பது மட்டுமல்லாமல், வங்கதேச விமானப்படை விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், பராமரிப்பு மற்றும் ரேடார் அமைப்புகளை மேம்படுத்தவும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
இது தவிர சுமார் எட்டு இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுடன், முறையாகவோ அல்லது முறைசாரா முறையாகவோ பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்த்திருப்பதாக அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
துருக்கி, அஜர்பைஜான், வங்கதேசம், லிபியா, சூடான், ஜோர்டான், எகிப்து மற்றும் பிற நாடுகள் பாகிஸ்தான் இராணுவ வன்பொருள் மற்றும் பயிற்சி ஆதரவை பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜர்பைஜானுடன் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 40 JF-17 விமானங்களுக்கான ஒப்பந்தமும் சூடானுடன் 1.1 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தமும் பாகிஸதான் ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
நடப்பு நிதியாண்டில் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுள்ள பாகிஸ்தான், இன்னும் 5 ஆண்டுகளில் அதை 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பாகிஸ்தானின் முப்படைகளின் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இஸ்லாமிய நேட்டோ அமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
















