அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய காளை உரிமையாளர்கள் ஆன்லைன் டோக்கன் முறையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
கட்சி சார்பற்ற இந்த போட்டியில் திமுகவின் தலையீடு அதிகமாக இருந்தது என பார்வையாளர்கள் முதல் போட்டியாளர்கள் வரை அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் 800 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
காலை முதலே உணவின்றி காத்திருந்த காளை உரிமையாளர்கள் தங்களின் காளை அவிழ்த்துவிடப்படவில்லை எனவும், திமுகவினரின் காளைகள் மட்டுமே களத்தில் இறக்கப்பட்டதாகவும் ஆதங்கத்துடன் கூறினர்.
மேலும் திமுகவில் பெரிய பதவியில் இருப்பவர்களின் காளைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், ஆன்லைன் டோக்கன் முறையில் பல்வேறு முறைகேடு நடப்பதாகவும் குறைகூறினர்.
















