சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக செல்லாமல் எங்கிருந்தும், எப்போதும் வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வகையில் 18 வகையான புதிய சேவைகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை, சொத்து வாங்குவோர் அதற்கான பத்திரப்பதிவை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் செல்வது தற்போது கட்டாயமாக உள்ளது.
பதிவுத்துறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ‘ஸ்டார் 2.0’ மென்பொருளுக்கு பதிலாக ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்து வாங்கும் மக்கள், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும், பத்திரப்பதிவை மேற்கொள்ளும் வகையில் 18 புதிய வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளதாகவும், டிஜிட்டல் கையெழுத்திட்டு சொத்து பத்திரங்கள் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.
சென்னை, கோவை உள்ளிட்ட சில மண்டலங்களில் மென்பொருளை பயன்படுத்தி பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















